வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்


வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2021 4:15 AM GMT (Updated: 8 April 2021 4:15 AM GMT)

மாணவர்கள் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 3-ந்தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் தீவிரமாக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

கிருமி நாசினி தெளிப்பு

அந்தவகையில் சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவிகள் படிக்கும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இதையடுத்து, இன்றும் (வியாழக்கிழமை) சில பள்ளிகளில் கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story