மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு


மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 4:59 AM GMT (Updated: 8 April 2021 4:59 AM GMT)

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாந்கராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 58 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 15 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 707 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 700-ஐ கடந்து அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக வார்டுகள் அமைக்கும் பணியும் நடக்கிறது.

மதுரையில் கடந்த 10 நாட்களில் அதாவது 29-ந்தேதி 32 பேரும், 28-ந்தேதி 39 பேரும், 30-ந்தேதி 48 பேரும், 31-ந்தேதி 44 பேரும், 1-ந்தேதி 48 பேரும், 2-ந் தேதி 105 பேரும், 3-ந் தேதி 66 பேரும், 4-ந்தேதி 58 பேரும், 5-ந்தேதி 88 பேரும், 6-ந்தேதி 120 பேரும் என மொத்தம் 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், கடந்த 10 தினங்களில் 203 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 6 பேர் உயரிழந்துள்ளனர்.

மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story