தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்


தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2021 8:50 AM GMT (Updated: 8 April 2021 8:50 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


சென்னை

இந்தியாவில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநில முதல்-அமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் நேற்று தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம்,

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் இன்று மேற்கொள்ளும் ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் என்னென்ன கருத்துகளை முன்வைக்க வேண்டும்? என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து உள்ளது அதன் விவரம் வருமாறு:-

அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி 

ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்  

அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி 

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத   இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி

45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

சினிம சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்  தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

Next Story