சென்னை வந்த அரசு பஸ்-லாரி மோதல் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி 21 பேர் படுகாயம்


சென்னை வந்த அரசு பஸ்-லாரி மோதல் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 April 2021 12:10 AM GMT (Updated: 9 April 2021 12:10 AM GMT)

சிதம்பரம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாகினா். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர், 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை நாகையை சேர்ந்த சிவக்குமார் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

அதேவேளையில் கடலூரில் இருந்து நள்ளிரவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்டெய்னர் லாரியை நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த அய்யப்பன் (51) என்பவர் ஓட்டினார்.

நேருக்கு நேர் மோதல்

அதிகாலை 2 மணி அளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள சாலையின் வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரியும், அரசு விரைவு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கன்டெய்னர் லாரியின் மீது மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார் மற்றும் பயணிகள் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த அன்புசாமி மகன் அன்பரசன்(37), நாகை பழைய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் வைரவன் (20) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தீவிர சிகிச்சை

அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் விபத்தில் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் அலறினர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர்.

பின்னர் படுகாயங்களுடன் பஸ்சுக்குள் தவித்த சென்னையை சேர்ந்த பிரவீன்குமார்(26), காரைக்காலை சேர்ந்த அருண்குமார்(30), நாகையை சேர்ந்த பாலமுருகன்(32) உள்பட 21 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story