சுங்கச்சாவடி கட்டணம் நியாயமாக இல்லை ஐகோர்ட்டு கருத்து


சுங்கச்சாவடி கட்டணம் நியாயமாக இல்லை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 9 April 2021 1:00 AM GMT (Updated: 9 April 2021 1:00 AM GMT)

சுங்கச்சாவடி கட்டணம் நியாயமாக இல்லை ஐகோர்ட்டு கருத்து.

சென்னை,

தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019-ம் ஆண்டு முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி ஜோசப் சகாயராஜ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை. இதுபோல, அதிக கட்டணம் வசூலிக்க முடியாது" என நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தி, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், "சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்க சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

பாஸ்டேக் முறை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நெருக்கமாக செல்லும் வகையில் இல்லாத முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Next Story