தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எத்தனை ஊழல் வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் கையாண்டுள்ளனர்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எத்தனை ஊழல் வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் கையாண்டுள்ளனர்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 April 2021 1:46 AM GMT (Updated: 9 April 2021 1:46 AM GMT)

தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், 2019-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணனை, செங்கல்ப்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்தது.

இந்த இடமாற்றமானது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

மக்கள் பாதிப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டார்

பி்ன்னர் நீதிபதிகள், “ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது. ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடக்கிறது. நீர் நிலைகள் போன்ற இயற்கை வளங்கள் மாயமாகின்றன. இதை தடுக்க வேண்டும். ஊழலினால் மிகவும் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். எனவே, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்படி செயல்படுகின்றனர்? அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றனர்? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனர்? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Next Story