கொரோனா, தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2,715 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிக நியமனம் + "||" + Corona, 2,715 health inspectors temporarily appointed for the task of controlling infectious diseases
கொரோனா, தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2,715 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிக நியமனம்
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2 ஆயிரத்து 715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் பழுதாகி, பயன்படுத்தப்படாத வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகுகிறது. எனவே, இந்த வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மீன்கள் வளர்ப்பு
டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயை பரப்பும் கொசு புழுக்களை உண்ணக்கூடிய மீன்கள் ஏரி குளங்களில் வளர்க்கப்படுகிறது. வீடுகள் மற்றும் தெருக்களில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுகிறது. டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறது. தமிழகத்தில் உள்ள 2,894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளன. அதை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்காலிக நியமனம்
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2 ஆயிரத்து 715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு நோய் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு அபாயம் இருக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.