கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்


கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 April 2021 2:15 AM GMT (Updated: 9 April 2021 2:15 AM GMT)

கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவில் இருந்து தற்போது வரை கபாலீசுவரர் சாமி மற்றும் கற்பகாம்பாள் சன்னதிக்கு உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியே இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதுடன், கைகள் சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. அத்துடன் உடல் வெப்பநிலை கண்டறிந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பவர்களை மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் நோய் பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டு உள்ளதால் இவை முறையாக பின்பற்றப்படும். பக்தர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தமிழக அரசு அறிவிப்பு

அதேபோல் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், பழம், பூ போன்றவற்றை தவிர்க்கவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், பத்து வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும் கேட்டு கொள்ளப்படுகிறது. கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கோவில்களில் சாமிக்கு நடக்க வேண்டிய அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் அனைத்தும் வழக்கம் போல் நடக்கும். அதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது.

தொடர்ந்து கடந்த ஆண்டு கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் சித்திரை திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. தொடர்ந்து 2-வது ஆண்டாக நடப்பு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பதும் நோய் பரவல் காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான கோவில்களில் நோய் பரவல் தடுப்புக்காக அரசு பிறப்பித்த உத்தரவுகள் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாளை (சனிக்கிழமை) முதல் கபாலீசுவரர் கோவில் உள்பட சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story