சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை தொடங்கியது 12 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கினர்


சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை தொடங்கியது 12 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கினர்
x
தினத்தந்தி 9 April 2021 2:42 AM GMT (Updated: 9 April 2021 2:42 AM GMT)

சென்னையில் 12 ஆயிரம் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது. இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய புதிய நடவடிக்கைகளில் களம் இறங்கியது. அதன்படி ஊரக உள்ளாட்சித்துறையின் உதவியோடு, தன்னார்வலர்களை பணியில் அமர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

காய்ச்சல் பரிசோதனை

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெரு அல்லது பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக கொண்டு வரப்பட்டு, வீடு வீடாக தினமும் சென்று தன்னார்வலர்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியது.

12 ஆயிரம் களப்பணியாளர்கள்

அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யயப்படும்.

இந்த கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக 4 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story