அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் பயங்கரம் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை


அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் பயங்கரம் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை
x
தினத்தந்தி 9 April 2021 4:11 AM GMT (Updated: 9 April 2021 4:11 AM GMT)

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அரக்கோணம், 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சோகனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 20), செப்பேடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சூர்யா (25) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் தங்கள் நண்பர்கள் சிலருடன் மது அருந்தினர்.

அப்போது பெருமாள்ராஜ பேட்டையை சேர்ந்த நண்பர் ஒருவரிடம், மது அருந்த வரும்படியும், தேர்தலின் போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசவும் அழைத்தனர்.

கோஷ்டி மோதல்

அதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒருவர் மது பாட்டிலால் பெருமாள்ராஜ பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அவர், போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.

சிறிது நேரத்தில் இருதரப்பு கோஷ்டிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் அர்ஜூன், சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் அடித்துக்கொலை

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ஜூன், சூர்யா ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த 2 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்த, கொலையாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

நெல் குவியல், டிராக்டருக்கு தீ வைப்பு

இந்த நிலையில், பெருமாள்ராஜ பேட்டையைச் சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த 500 மூட்டை நெல் குவியல் மற்றும் அருகில் இருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் நெல் குவியல் மற்றும் டிராக்டர் தீயில் கருகி நாசமாகின.

இந்த சம்பவங்கள் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருதரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, அர்ஜூன், சூர்யா ஆகியோரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் வாலிபர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

புதுமாப்பிள்ளை

கொலை செய்யப்பட்ட சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அதேபோல் அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகிறது. 2 பேர் படுகொலை சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்யக் கோரி திருத்தணியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

Next Story