2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா


2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 April 2021 4:39 AM GMT (Updated: 9 April 2021 4:39 AM GMT)

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை வீட்டில் அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகன் காட்பாடியில் தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

கடந்த 6-ந்தேதி, காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று ஓட்டு போட்டார். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய சில நாட்களிலே துரைமுருகன் 2 தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

கொரோனா உறுதி

அதன்பிறகு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போதே அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு நடந்த நாளிலில் இருந்து அவர் உடல் சோர்வாக காணப்பட்டார். இந்தநிலையில் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அவர் நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பினார்.

கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தங்கினார். அப்போது காய்ச்சல் அதிகமானதால், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று காலை வெளிவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீட்டில் தனிமை

ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, பெரிய அளவில் தொற்று பாதிப்பு இல்லை என்றும், குறைவான அறிகுறி இருப்பதால், வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு விரைவில் குணமாகி, வழக்கமான அவரது கடமைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம்’, என கூறப்பட்டுள்ளது.

Next Story