சென்னையில் அதிகரிக்கும் கொரோனா 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு


சென்னையில் அதிகரிக்கும் கொரோனா 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 10:12 AM GMT (Updated: 9 April 2021 10:12 AM GMT)

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சென்னையில் அதிகரிக்கும் கொரோனாவால் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை

சென்னையில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், வில்லிவாக்கம் வசந்தம் காலணி, சூளைமேடு லோகநாதன் நகர், வன்னியர் தெரு, மைலாப்பூர் அலமேலு மங்கா நகர், ஆலிவர் ரோடு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜிபி சாலையில் உள்ள 249 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்தவாரம் பரங்கிமலைக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுக்காக சென்றுள்ளார்.

அவர் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு வளாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காய்ச்சல் முகாம் அமைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், வீடு வீடாகவும் பரிசோதனை செய்துவருகின்றனர். 

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 10-ம் தேதி முதல்பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த, இந்த கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, சென்னையில் 1ம் மண்டலம்- ஜானி டாம் வர்கீஸ், 2- பி.கணேசன், 3- டி.மோகன், 4- கே.பி.கார்த்திகேயன், 5- கே.நந்தகுமார், 6- நரவானே மனீஷ் சங்கர்ராவ், 7- எஸ்.சுரேஷ்குமார், 8- எஸ்.கோபால சுந்தரராஜ், 9- தீபக் ஜேக்கப், 10- எஸ்.வினீத், 11- டி.பிரபுசங்கர், 12- எல்.நிர்மல்ராஜ், 13- ஜெ.யு.சந்திரகலா, 14- பி.முருகேஷ், 15- கே.வீரராகவராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story