மாநில செய்திகள்

விவிபேட் எந்திரத்தை எடுத்துச்சென்ற விவகாரம்: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் + "||" + The issue of taking away the vivipad machine: Re-registration in Velachery constituency? Chief Electoral Officer Description

விவிபேட் எந்திரத்தை எடுத்துச்சென்ற விவகாரம்: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

விவிபேட் எந்திரத்தை எடுத்துச்சென்ற விவகாரம்: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
விவிபேட், வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவற்றை எடுத்துச்சென்ற வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடக்குமா? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

முற்றிலும் தவறு

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பொதுவாக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டது. இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தவறு அல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை முற்றிலும் மீறிய தவறாகும். 2 வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், விவிபேட் எந்திரம் ஆகியவற்றை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றுள்ளனர்.

15 ஓட்டுகள் பதிவு

அங்கு வாக்குப்பதிவின்போது எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் மாற்றாக பயன்படுத்துவதற்காக கூடுதல் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. 50 நிமிடம் பயன்படுத்திய விவிபேட் எந்திரம் பழுதாகியுள்ளது. அதில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. பழுதான விவிபேட் எந்திரத்தை எடுத்துவிட்டு வேறு விவிபேட் எந்திரத்தை பொருத்திவிட்டனர்.

சந்தேகம் உள்ளது

பயன்படுத்தப்பட்ட எந்திரத்தை வெளியே, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது மிகப்பெரிய தவறு. இதுதொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆணையம் முடிவெடுக்கும். அவர்கள் எடுத்துச்சென்ற வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு பதிவாகவில்லை. அது மாற்று எந்திரமாகும். ஆனால் விவிபேட் எந்திரம் மட்டும் 50 நிமிடம் ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் 15 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறப்பட்டாலும், அதிலும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. மண்டல குழு அதிகாரிகள் ராணுவ பாதுகாப்புடன்தான் வேறு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இவர்கள் 2 பேரும் அதை ஓட்டு பதிவு செய்யப்படாத எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். மின்னணு எந்திரங்களை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

3 விதமான விசாரணை

பயிற்சிக்காக கொண்டு செல்லப்படும் எந்திரங்களைக்கூட இப்படி கொண்டு செல்லக் கூடாது. 15 ஓட்டுகள்தான் பதிவாகியுள்ளதாக கூறுவதும் தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். அந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் 200-க்கும் அதிகமான ஓட்டுகள் உள்ளன. அதுபற்றிய அனைத்து தரவுகளும் ஆணையத்திற்கு அனுப்பப்படும். இந்த சம்பவத்தில் 3 விதமான விசாரணை மேற்கொள்ளப்படும். எந்திரங்களை எடுத்துச் சென்றவர்களை பொதுமக்கள் அடித்ததாக கூறப்படுவதால் அதை போலீசும் விசாரிக்கும். அடுத்ததாக மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்துவார். அது துறை ரீதியான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். அதில் எத்தனை ஓட்டுகள் பதிவாகி இருந்தன? மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா? என்பதுபோன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும்.

கொரோனா காரணமா?

அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தும்படி காங்கிரஸ் நேரில் மனு கொடுத்துள்ளனர். அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டைவிட 1.3 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதுபற்றி இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் கொரோனாவை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. ஏனென்றால் சில இடங்களில் 87, 86 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நகரங்களில் சற்று குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனாவுக்கு அஞ்சி சிலர் வராமல் இருந்திருக்கலாம். ஏனென்றால், வீட்டை விட்டு இன்னும் வெளியே வராத பலர் உள்ளனர். வயதானவர்கள் சிலர் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் எச்சரித்து நிறுத்தி இருந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற விவகாரம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன்
சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பணியாளர்கள் 3 ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற என்ஜினீயர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
3. ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 2 ‘விவிபேட்’ எந்திரங்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.