சென்னையில் 3-வது நாளாக நடந்தது: மு.க.ஸ்டாலின் உடன் மேலும் 60 தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சந்திப்பு; ‘தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கினர்’


சென்னையில் 3-வது நாளாக நடந்தது: மு.க.ஸ்டாலின் உடன் மேலும் 60 தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சந்திப்பு; ‘தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கினர்’
x
தினத்தந்தி 11 April 2021 12:40 AM GMT (Updated: 11 April 2021 12:40 AM GMT)

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மேலும் 60 வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அப்போது தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மே 2-ந் தேதி வரையிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இந்தநிலையில், மு.க.ஸ்டாலினை, அக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கடந்த 8-ந் தேதி முதல் நேரில் சந்தித்து வருகின்றனர். அப்போது, தங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? வாக்குப்பதிவுக்கு பிந்தைய மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?, தேர்தலில் ஆற்றிய பணிகள் குறித்தும் விளக்கி வருகிறார்கள். அந்தவகையில், ஏற்கனவே சுமார் 150-க்கும் மேற்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துள்ளனர்.

வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம்

மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று 3-வது நாளாக சந்தித்தனர். அப்போது, தொகுதியில் தங்களுக்கு உள்ள வெற்றி வாய்ப்பு குறித்தும், வாக்கு எண்ணும் மையங்களை எப்படி தொடர்ச்சியாக கண்காணிக்கிறோம்? என்பது குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து வெற்றி வாகை சூடிய பின்னர் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

கோடை காலம் என்பதால் மக்களுடைய தாகத்தை தணிப்பதற்காக நீர், மோர் பந்தல்கள் அமைக்கவேண்டும் என்றும், கபசுர குடிநீர் கொடுக்கவேண்டும் என்றும் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இதுதொடர்பான பணிகளை மக்களின் நலனுக்காக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் சில தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, அடுத்த சில நாட்களில் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story