கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடை அமல்: பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை; சானிடைசர் பாட்டில்களை மீண்டும் வைக்க கோரிக்கை


கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடை அமல்: பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை; சானிடைசர் பாட்டில்களை மீண்டும் வைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2021 1:02 AM GMT (Updated: 11 April 2021 1:02 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடை நேற்று அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும் பொதுமக்கள் முக கவசம் அணிவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்.

பஸ்களில் நின்று பயணிக்க தடை

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்து அதற்கான உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ், சென்னையில் இயங்கும் மாநகர பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும், பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

போக்குவரத்து கழகம் ஏற்பாடு

அதன்படி, சென்னையில் இயங்கக்ககூடிய மாநகர பஸ்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் உள்பட மற்ற பஸ்களிலும் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருக்கை அனைத்தும் நிரம்பி, நின்றபடி பயணிக்க பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த பயணிகள் அதற்கு அடுத்தபடியாக வரும் பஸ்களில் ஏறி பயணம் சென்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தினமும் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அந்தவகையில் காலை, மாலை நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் இந்த கூடுதல் பஸ்களை இயக்கி, பஸ்களில் நின்று கொண்டு பயணிகள் பயணம் செய்யாத படி வழிவகைகளை செய்து இருந்தனர்.

பஸ்களில் இப்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை இனி வரக்கூடிய நாட்களிலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நடைமுறைகளை ஓரிரு நாட்கள் மட்டும் பின்பற்றி, பின்னர் அதை காற்றில் பறக்க விடுவது மேலும் கொரோனா பரவலை அதிகரிக்கத்தான் செய்யும்.

சானிடைசர் பாட்டில்

இவ்வளவு நடவடிக்கைகள் அரசு எடுத்தாலும், பொது மக்கள் முக கவசம் அணிவது மிக அவசியம் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி தெரிவித்தாலும், பொதுமக்கள் முக கவசம் அணிவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டிதான் வருகின்றனர். பஸ்களில் ஏறி பயணிக்கும் பயணிகள் கடமைக்கு முக கவசம் அணிவது போல, நாடிப்பகுதி வரை மட்டும் முக கவசத்தை அணிந்து பயணிக்கின்றனர்.

மேலும் கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட போது, ஒவ்வொரு பஸ்களிலும் பயணிகள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்காக சானிடைசர் பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த சானிடைசர் பாட்டில் பெரும்பாலான பஸ்களில் இல்லை. அப்படி இருந்தாலும், அது பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இல்லை. இதை சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாக்ஸ்பயணிகள் வரவேற்பு

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பஸ்களில் கூட்டமாக பயணிகள் பயணிப்பதை தவிர்க்கும் விதமாகவும், பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.அந்த உத்தரவு நேற்று அமலுக்கும் வந்த நிலையில், பயணிகள் இந்த நடைமுறைக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று பயனிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.சில வழித்தடங்களில் மூச்சுவிடக்கூட முடியாமல் நெருக்கி நின்றபடி பயணித்த பயணிகள், தற்போது அரசின் இந்த உத்தரவை வரவேற்று, பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story