நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வழங்குவதற்காக இணையதளம் மூலம் மின்இணைப்பு பெயர் மாற்றும் முறை அறிமுகம்; மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்


நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வழங்குவதற்காக இணையதளம் மூலம் மின்இணைப்பு பெயர் மாற்றும் முறை அறிமுகம்; மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 April 2021 1:31 AM GMT (Updated: 11 April 2021 1:31 AM GMT)

நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வழங்குவதற்காக மின்இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

புதிய மின் இணைப்பு

தமிழகத்தில் உள்ள வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின்சார வினியோகத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே வழங்கி வருகிறது. மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணம் செலுத்துவது, புகார் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இணையதளம் மூலம் அளித்து வருகிறது. அந்தவகையில் புதிதாக மின்சார வினியோகம் வழங்க கோரி விண்ணப்பிக்கும் மின்நுகர்வோர்களுக்கு பல்வேறு காரணங்களால் சரியான நேரத்தில் மின்சார வினியோகம் வழங்க முடியாத நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து பொதுமக்களும் மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார்களும் தெரிவித்து வந்தனர். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் மின்இணைப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புதிதாக மின்சார வினியோகம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

திட்டத்திற்கு முழு ஆதரவு

இவ்வாறு விண்ணப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கும் காலம், நேரம் போன்றவை கணினியில் பதிவாகி விடுவதால் உயர் அதிகாரிகளுக்கு மின்வினியோகம் வழங்குவதற்கு யாரால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது தெரியவருகிறது. இதனால் புதிய மின்இணைப்பு கேட்கும் மின்நுகர்வோர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்இணைப்பு வழங்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் குறிப்பிட்ட காலத்தில் இணைப்பு கிடைப்பதால் இந்த திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவருடைய பெயரில் மாற்றுவதற்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு ரூ.300 கட்டணமும் செலுத்தப்பட்டு, சரியான ஆவணங்களும் இணைத்து இருந்தாலும் ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்படுவதில்லை என்ற குறையும் மின்நுகர்வோர் மத்தியில் இருந்து வருகிறது.

உடனுக்குடன் வழங்க திட்டம்

இதனை மாற்றியமைப்பதற்காக, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்வது போன்று, தற்போது ஒருவர் பெயரில் உள்ள மின்இணைப்பை மற்றொருவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற வழிகாட்டும் விவரங்களும், தகவல்களும் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனுக்குடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மின்நுகர்வோர்கள் இதனை முறையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 


Next Story