உத்தரகாண்டை போல் தமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்; ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்


உத்தரகாண்டை போல் தமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்; ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2021 1:42 AM GMT (Updated: 11 April 2021 1:42 AM GMT)

உத்தரகாண்டை போல் தமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பாராட்டு

உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த கோவில்கள் மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய படி.

கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தரகாண்ட் அரசு உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்த மகத்தான முடிவை எடுத்த முதல்வர் திரத்சிங் ராவத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய அரசு முடிவெடுக்க வேண்டும்

வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கையை மற்ற மாநில முதல்-மந்திரிகளும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிப்பது உத்தரகாண்ட் போல் எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விருப்பம் இருந்தால் எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும். தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், வீடியோவுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கோவில்களை விடுவிக்கும் இயக்கத்தை ஆதரித்ததற்கு திரத்சிங் ராவத், உத்தரகண்ட் அரசு, ஊடகங்கள், 3 கோடிக்கு மேலான மக்கள், ஆன்மீக-மதத் தலைவர்கள் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

 


Next Story