அரக்கோணம் அருகே இரட்டை கொலை: வாலிபர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு; குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்


அரக்கோணம் அருகே இரட்டை கொலை: வாலிபர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு; குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்
x

அரக்கோணம் அருகே இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து 4-வது நாளாக போராட்டம் நடந்தது.

இரட்டை கொலை
அரக்கோணம் அருகே உள்ள சித்தம்பாடி பகுதியில் கடந்த 7-ந் தேதி இருதரப்பினருக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் பக்கத்து கிராமமான சோகனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (வயது 20), செம்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25) ஆகிய 2 வாலிபர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து அர்ஜுன், சூர்யா ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து 4 நாட்களாக உடல்களை வாங்க மறுத்து சோகனூர் சர்ச் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய 
வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் நிதி உதவியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-ம், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வழங்கினர். மேலும் இறந்தவர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.மேலும் அவர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர்.

உறவினர்களிடம் ஒப்படைப்பு
அதன்பேரில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் உடலை வாங்க சம்மதித்தனர்.பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அர்ஜுன், சூர்யா ஆகிய 2 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமாவளவன் ஆறுதல்
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story