திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்; கவிஞர் வைரமுத்து கோரிக்கை


திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்; கவிஞர் வைரமுத்து கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2021 2:32 AM GMT (Updated: 11 April 2021 2:32 AM GMT)

வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கும் விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

60 திருவள்ளுவர் சிலைகள்
வி.ஜி.பி. உலக தமிழ்சங்கம் சார்பில் வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கும் விழா சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை முன்னிலை வகித்தார்.விழாவில் வட அமெரிக்காவில் 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ் சங்கத்திற்கு 60 திருவள்ளுர் சிலைகள் 
வழங்கப்பட்டது. இதனை வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் வட அமெரிக்கா தமிழ் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல்வேள் நம்பியிடம் ஒப்படைத்தார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

பிரதமருக்கு வேண்டுகோள்
முத்து மிளகு ஏலம் மயில்தோகை என்று ஏற்றுமதி செய்துகொண்டிருந்த தமிழன் இன்று அறிவை ஏற்றுமதி செய்கிறான். வி.ஜி.சந்தோசம் வடித்திருக்கும் திருவள்ளுவர் சிலைகளை அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கு வழங்கி நாங்கள் வழியனுப்புகிறோம். இது அமெரிக்க அறிவுலகத்துக்குத் தமிழர்கள் கொடுக்கும் கொடை என்று கொள்ள வேண்டும். இந்த நல்ல வேளையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.உலக மேடைகளிளெல்லாம் திருக்குறளை உச்சரிக்கிறீர்கள். அப்போதெல்லாம் உலகத் தமிழர்களின் தோள்கள் ஓரங்குலம் உயர்கின்றன. ஆனால், சொல்லில் மட்டுமே தமிழர்கள் சொக்கிவிடமாட்டார்கள். சொல் பித்தளை; செயல்தான் தங்கம் என்பார்கள். திருவள்ளுவரை உளமார நேசிக்கும் நீங்கள் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

எந்த மதத்தையும் சார்ந்ததில்லை
திருக்குறள் எந்த மதத்தையும் சார்ந்ததில்லை. திருக்குறள் பொதுநூல்.தமிழர் நாகரிகங்களை இந்தியா அறிய, இந்திய நாகரிகத்தை உலகம் அறிய திருக்குறளை தேசிய நூலாக பிரதமர் அறிவிக்க வேண்டும். அது ஒரு இனத்தின் பெருமையை மட்டுமல்ல ஒரு தேசத்தின் பெருமையை உலகுக்கு அறிவிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெருந்துணையாக இருக்கும்
விழாவில் வி.ஜி.சந்தோசம் பேசும்போது, ‘திருவள்ளுவர் சிலைகளை அமைப்பதினால் திருக்குறளின் பெருமையையும், தமிழ்மொழியின் பெருமையையும் பரவும். தமிழ் மொழியை உலக மக்கள் அறிந்து கொள்ள பெருந்துணையாக இருக்கும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வி.ஜி.பி. ரவிதாஸ், வி.ஜி.பி. ராஜாதாஸ், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் ஞானசம்பந்தன், நடிகர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியர் அபிதா சபாபதி தொகுத்து வழங்கினார்.

Next Story