உரங்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி, வைகோ வலியுறுத்தல்


உரங்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி, வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2021 3:05 AM GMT (Updated: 11 April 2021 3:05 AM GMT)

ஏ.டி.பி., காம்ப்ளாக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

உரங்கள் விலை உயர்வு

டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை 50 சதவீதத்துக்கு மேல் அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த விலை உயர்வை திரும்பப்பெறுமாறும் வலியுறுத்தி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

உரங்களுக்கான மானியத்தை ரத்து செய்ததால் உரத்தின் விலை கடுமையாக உயர்ந்து விவசாயிகளின் உற்பத்தி செலவு கூடியிருக்கிறது. அதேநேரத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களால் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் விளை பொருட்களை என்ன விலைக்கு விற்கலாம்? என்று ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது இதை சந்தை முடிவு செய்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.:- இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ டை அமோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.) உரத்தின் விலை 58.33 சதவீதமும், காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி., ஒரு மூட்டை ரூ.1,200-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.700 விலை உயர்ந்து ரூ.1,900 ஆகி விட்டது. ரூ.1,160-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் (10-26-26), தற்போது ரூ.615 உயர்ந்து ரூ.1,775-க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 ரக காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950-ல் இருந்து ரூ.400 உயர்ந்து, தற்போது ரூ.1,350 ஆக விற்கப்படுகின்றது.

மத்திய பா.ஜ.க. அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மத்திய பா.ஜ.க. அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 


Next Story