சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரிப்பு


சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 April 2021 8:45 AM GMT (Updated: 12 April 2021 8:45 AM GMT)

சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை:

சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அந்த தெருவில் தடுப்புவேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது. 300, 400 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில் சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 -ஆக அதிகரித்து உள்ளது.

ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. அவர்களோடு தொடர்பில் உள்ள உறவினர்களுக்கோ, அருகில் உள்ள குடும்பத்தினருக்கோ வைரஸ் பரவி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ சிகிச்சை பெறலாம்.

லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சுகாதார பணியாளர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இருந்தது போல கட்டுப்பாடு பகுதிகள் முடக்கப்படுவது இல்லை. எவ்வித அறிவிப்பு பலகையோ, தகரமோ அடித்து வேறுபடுத்தி காட்டுவது இல்லை.

ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவருக்கு தொற்று பரவினால் தற்போது மாநகராட்சி மூலம் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அத்தெரு மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி கூறும் போது 

சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறித்து ஊழியர்கள் கேட்டறிந்து வருகிறார்கள். எந்த தெருவில் பாதிப்பு அதிகம் வருகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும்.

சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய மாநகராட்சி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவ உதவி, உணவு வாங்கி தருவது போன்ற பணிகளை அழைப்பின் பேரில் செய்து வருகின்றனர்.

சென்னையில் தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு அதிகமான கட்டுப்பாடு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஒவ்வொரு தெருக்களையும் வார்டு வாரியாக கண்காணித்து வருகிறது.

காய்ச்சல், சளி, இருப்பதால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story