தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டது; சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று; பொதுமக்கள் விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தல்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டது; சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று; பொதுமக்கள் விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 April 2021 7:19 PM GMT (Updated: 13 April 2021 7:19 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது. சென்னையில் 100 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை புதியஉச்சத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தொட்டுள்ளது.

சென்னையில்2 ஆயிரத்து 482 பேர்
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

82 ஆயிரத்து 236 பேருக்கு பரிசோதனை
தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 203 ஆண்கள், 2 ஆயிரத்து 781 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,052 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 482 பேரும், செங்கல்பட்டில் 771 பேரும், கோவையில் 504 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 9 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 ஆண்களும், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 34 ஆயிரத்து 364 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 31 ஆயிரத்து 669 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 5 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், கடலூர், நெல்லையில் தலா இருவரும், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 945 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

3,289 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து 3,289 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 853 பேரும், கோவையில் 369 பேரும், செங்கல்பட்டில் 310 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 199 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 49 ஆயிரத்து 985 பேர் உள்ளனர்.இங்கிலாந்தில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 208 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 665 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 629 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 பயணிகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 21 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 39 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை காவல்துறை சார்பில் தினமும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேற்று காலை சென்னை தியாகராயர் சாலை மற்றும் தாமஸ் சாலை குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

100 போலீசாருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை காவல்துறையில் கொரோனா முதல் அலையில் 3,300 பேர் பாதிக்கப்பட்டு மீண்டனர். தற்போது பரவி வரும் 2-வது அலையில் சென்னை காவல் துறையில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இதுவரை சென்னை போலீசில் 7 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

12-ந் தேதி (நேற்று முன்தினம்) மட்டும் 700 பேர் தடுப்பூசி போட்டனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது தினமும் வழக்கு போடப்படுகிறது. தினமும் 500 முதல் 700 பேர் மீது வழக்கு போட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை 100 கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகளை கடைபிடிக்க..
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட நாம், 2-வது அலையில் இருந்தும் மீள்வதற்கு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் லட்சுமி, துணை கமிஷனர்கள் ஹரிகிருஷ்ணபிரசாத், தீபா சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நேற்று மாலையில் சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் கலந்து கொண்டு பேசினார்.

உதவி கமிஷனர்கள் 3 பேர் பாதிப்பு
சென்னையில் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

Next Story