கொடியேற்றம்-விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை: மதுரை சித்திரை திருவிழா நாளை தொடக்கம் - மீனாட்சி அம்மனை வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு


கொடியேற்றம்-விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை: மதுரை சித்திரை திருவிழா நாளை தொடக்கம் - மீனாட்சி அம்மனை வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 14 April 2021 3:55 AM GMT (Updated: 14 April 2021 3:55 AM GMT)

மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தமிழக அரசு 144 தடை விதித்தது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. அது பக்தர்களை வேதனை அடையச் செய்தது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு பக்தர்கள் யாருமின்றி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் நடத்தி வைக்கப்பட்டது. எனவே இந்தாண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் கடந்த மாதத்தில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது.

எனவே மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே இந்தாண்டு சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றம், விழா நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வருகிற 22-ந் தேதி இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24-ந் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை நடக்கிறது.

திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி உள் திருவிழாவாக நடக்க உள்ளது. மேலும் திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் காலை, இரவு நேரங்களில் வலம் வருவர். அந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசிக்க அனுமதியில்லை.

அதே நேரத்தில் வழக்கம் போல் தினமும் காலை, மாலையில் கோவில் நிர்வாகம் அறிவித்த நேரத்தில் சுவாமி, அம்மனை பக்தர்கள் தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story