சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு -மாநகராட்சி ஆணையர்


சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு -மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 14 April 2021 11:08 AM GMT (Updated: 14 April 2021 11:08 AM GMT)

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை தியாகராய நகரில் காய்ச்சல் சிறப்பு முகாமை ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

 சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கான தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளது.சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னையில் தற்போதைய மக்கள்தொகை சுமார் 80 லட்சமாக இருக்கும் என்று கணித்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகரில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் இறுதிக்குள் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

சென்னையில் 450 தடுப்பூசி முகாம்கள் இயங்கி வருகின்றன. இன்றைய நிலவரப்படி 10 முதல் 15 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம் கையிருப்பில் உள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகம் குறைந்திருந்தது. தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி இருக்கிறோம். தற்போது நாளொன்றுக்கு 30,000 முதல் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 55,000 முதல் 60,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

சென்னையில் 45 வயதுக்கு மேல் 22 லட்சம் பேர் உள்ள நிலையில், அதில் 42% பேர் தடுப்பூசி போட்டுவிட்டனர்.ஆகவே, 45 வயதைக் கடந்தவர்கள் தாராளமாக எவ்விதத் தயக்கமும் இல்லாமல், பயமும் இல்லாமல் ஒரு தேசியக் கடமையாக இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் 10 லட்சம் பேருக்கு நாம் போட்டுள்ளோம். எங்கேயும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில் இணை நோயுள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொண்டோர், இதய நோய், மற்ற நோய் உள்ளவர்கள் இருந்திருப்பார்கள்.

வரும் அனைவரையும் எங்கள் மருத்துவர்கள் பரிசோதித்து தாராளமாகப் போடலாம் என்றால் போடுகிறோம். 10 லட்சம் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல, அதை முடித்துள்ளோம். ஆகவே, மீதமுள்ளவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து நாங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டியல் போட்டுள்ளோம். அது இல்லாமல் அரசு பொது மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. இதுவே 250க்கு மேல் உள்ளன.

இது தவிர தனியார் மருத்துவமனைகள் 150க்கு மேல் உள்ளன. அங்கும் போட்டுக்கொள்ளலாம். அங்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தாராளமாக அங்கும் போடலாம். இந்த அளவுக்கு அதிகமாக மாநகராட்சியில் உள்ளது பெரிய விஷயம். ஆகவே, இதைப் பயன்படுத்தி சென்னை மக்கள் உடனடியாகத் தடுப்பூசி போடுவதை முடித்தால் 10 லட்சம் என்பதை 20 லட்சம் என்று மாற்றிவிட்டால் அதன் பின்னர் தொற்று குறைய ஆரம்பித்துவிடும்.

எல்லோரும் எதிர்ப்பு சக்தி இருக்கும் நிலைக்கு மாறிவிட்டால் தொற்று எண்ணிக்கை குறைந்துவிடும். ஆகவே, பொதுமக்களுக்கு 45 வயது ஆகியிருந்தால் ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும். தடுப்பூசி போட்டுவிடலாம் என கூறினார்.

Next Story