தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை - சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை - சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 15 April 2021 11:41 AM GMT (Updated: 15 April 2021 11:41 AM GMT)

தலைமை நீதிபதியுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறியதாக பேட்டி அளித்தார்.

சென்னை

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் அரியர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம், தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார்.

கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்று மதியமே சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை நீதிபதியை இன்று மதியம் சந்தித்தார். தலைமை நீதிபதியிடம் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விளக்கினார்.

இது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தலைமை நீதிபதி கேட்ட விவரங்களைக் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் நடக்கும் கோர் கமிட்டி கூட்டத்தில் சில ஆலோசனைகளை எடுக்க உள்ளோம். தினமும் 8 ஆயிரம் தொற்று இருந்தால் என்ன நடவடிக்கை, 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை இருந்தால் என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.

இது தவிர தடுப்பூசியைத் தீவிரப்படுத்துவது, பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம். அலுவலகங்களில் யார் யார் எல்லாம் வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்புள்ளதோ அதைச் செய்யுமாறு கேட்டுள்ளோம். இவற்றை எல்லாம் தலைமைச் செயலாளர் கமிட்டி மூலம் முதல்வரிடம் அளித்துச் செயல்படுத்த உள்ளோம். இந்த விவரங்களை நாங்கள் தலைமை நீதிபதியிடன் தெரிவித்துள்ளோம்.

அரசு தலைமை வழக்கறிஞர் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பைக் குறிப்பிட்டார். அவர் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை.

ஐகோர்ட்டில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை மேற்கொண்டோம்.

தமிழகத்தில் 83 ஆயிரத்து 316 படுக்கைகள் உள்ளன. அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தப்படும்
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story