தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 15 April 2021 1:28 PM GMT (Updated: 15 April 2021 1:28 PM GMT)

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தினசரி பாதிப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்து வந்த நிலையில் நேற்று முதல் முறையாக 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று 2வது நாளாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர அதிகபட்சமாக செங்கல்பட்டு 685 பேர், கோவை 534 பேர், திருவள்ளூர் 473 பேர், காஞ்சிபுரம் 203 பேர், தஞ்சையில் 166 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story