பெரியார் சாலை பெயர் மாற்றத்துக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் விளக்கம்


பெரியார் சாலை பெயர் மாற்றத்துக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் விளக்கம்
x
தினத்தந்தி 15 April 2021 3:36 PM GMT (Updated: 15 April 2021 3:49 PM GMT)

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் மறைத்த அம்பேத்கரின் வரலாறு, புகழை பா.ஜ.க. வெளிக்கொண்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட தேசிய தலைவரை கொண்டாட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் அம்பேத்கர் தங்களுக்கு தான் சொந்தம் என்பது போல், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது, கலவரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதுரையில் இதுபோன்ற கலவரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்திருக்கிறார்கள். எங்களுடைய நிர்வாகிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாங்கள் அகிம்சையை விரும்புபவர்கள். அவர்கள் எந்த இடத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில் ெவள்ளிக்கிழமை நான் சென்று மாலை அணிவிக்க இருக்கிறேன். மேலும் அங்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலை பெயர் மாற்றம் ஏன்?

சென்னையில் பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து எல்.முருகனிடம் கேட்டதற்கு, ‘நெடுஞ்சாலைத் துறையின் பதிவில் ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க்‘ சாலை என்றுதான் இருக்கிறது. மாநகராட்சியின் பதிவில்தான் ஈ.வெ.ரா.சாலை என்று மாற்றி இருக்கிறார்கள். இது அரசாங்கம் ஆவணங்களை திருத்த வேண்டியது. இதற்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலைத்துறை ஆவணங்களில் ஏன் மாற்றவில்லை.

இவ்வாறு முருகன் கூறினார்.


Next Story