பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகளுக்கு மீண்டும் பெரியார், அண்ணா, காமராஜர் பெயர் வைக்கப்பட வேண்டும் தமிழக அரசிடம் தி.மு.க. கோரிக்கை


பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகளுக்கு மீண்டும் பெரியார், அண்ணா, காமராஜர் பெயர் வைக்கப்பட வேண்டும் தமிழக அரசிடம் தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 12:41 AM GMT (Updated: 16 April 2021 12:41 AM GMT)

பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகளுக்கு மீண்டும் பெரியார், அண்ணா, காமராஜரின் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனை தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்ட சில நெடுஞ்சாலைகளின் பெயர் மாற்றப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. சென்னையை நோக்கி வரும் அதுபோன்ற நெடுஞ்சாலைகளுக்கு தலைவர்களின் பெயர் சூட்டுவது, அப்போதிருந்த அரசின் கொள்கை முடிவாகும். அரசியல், சமூகப் பணி, கலாசாரம், அறிவாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பெரியவர்களைப் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக அவர்களுக்கு இந்த பெருமை சேர்க்கப்படுகிறது.

அந்த வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை என்று 1979-ம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மவுண்ட் ரோடிற்கு அண்ணாசாலை என்றும் கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்டு, மகாபலிபுரம் சாலைக்கு மாமல்லபுரம் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது.

இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகளை அவமதிப்பு செய்யும் வகையில், அந்த சாலைகளின் பெயரை முறையே, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு, கிராண்ட் நார்தர்ன் டிரங்க் ரோடு, மகாபலிபுரம் ரோடு என இந்த சாலைகளின் அருகே பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, பெரிய தலைவர்களின் நினைவையும், தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளை அவமதிப்பதாக உள்ளது.

சாலைகளின் பெயர்களை மாற்றும் இந்த நடவடிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் ஆளுமைகளை அவமதிப்பதுடன், மாநிலத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கும். போராட்டங்களுக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுத்துவிடக் கூடும்.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கை, திராவிட இயக்கத்தையும், அதன் ஆளுமையான தந்தை பெரியாரையும், விரும்பாத அ.தி.மு.க.வின் வடநாட்டு எஜமானர்களின் கருத்தியலை மகிழ்விக்கும் செயலாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாகத் தாங்கள் தலையிட்டு, மத்திய அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்தந்த சாலைகளுக்கு பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி, “அந்த தலைவர்களின் பெயரை சாலைகளுக்கு வைத்தது, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ஆவணத்தில் இடம்பெறவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் கூறுவது பொருத்தமற்றது. அந்த சாலைகளுக்கு பெரியார், அண்ணா, காமராஜர் பெயர் வைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பெயர்கள் அரசு ஆவணத்தில் இருப்பதை தலைமைச் செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்” என்று அவர் குறிப்பிட்டார்.

Next Story