மாநில செய்திகள்

டிராக்டர் மீது மோதியதில் தொழிலாளி நிரந்தர ஊனம்: வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு + "||" + In a collision with a tractor Permanent disability of the worker Vaigai Express train Order to confiscate

டிராக்டர் மீது மோதியதில் தொழிலாளி நிரந்தர ஊனம்: வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு

டிராக்டர் மீது மோதியதில் தொழிலாளி நிரந்தர ஊனம்: வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு
ரெயில் விபத்தில் தொழிலாளி நிரந்தர ஊனம் அடைந்ததால் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய திருச்சி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
திருச்சி, 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி அரியலூர் செல்வதற்காக சென்னை- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

விக்கிரவாண்டி அருகே ரெயில் வந்தபோது ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற ஒரு டிராக்டர் மீது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் அந்த டிராக்டர் சுக்குநூறாக நொறுங்கியது.

டிராக்டர் மீது வேகமாக மோதியபோது ரெயில் குலுங்கியதில் ரெயிலில் பயணம் செய்த பழனிவேலுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர் நிரந்தர ஊனம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து பழனிவேல், தனக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சி 3-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பழனிவேலுவிற்கு டிராக்டர் உரிமையாளர் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிவேலு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பழனிவேலுக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.2½ லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு கடந்த 2017-ம் ஆண்டு அளிக்கப்பட்டது. ஆனால் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திருச்சி 3-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் அவர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது ரெயில்வே சார்பில் ஆஜராகிய அதிகாரிகள் இழப்பீடு தொகையில் 60 சதவீதத்தை செலுத்தி விட்டு மீதி தொகையை வழங்காமல் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் பழனிவேல் தரப்பில் ஆஜரான வக்கீல் ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் விபத்தை ஏற்படுத்திய வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் முதல் கார்டு வரையிலான அனைத்து பெட்டிகளையும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இதன் அடிப்படையில் நீதிபதி விவேகானந்தன் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதுதொடர்பாக இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் செந்தில்குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் கோர்ட்டில் படித்தொகை செலுத்தி அமீனா, நாசர் உதவியுடன் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து மதுரை செல்லும்போதோ அல்லது மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதோ திருச்சியில் ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.