ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்- சென்னை போலீஸ் கமிஷனர்


ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்- சென்னை போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 16 April 2021 10:48 AM GMT (Updated: 16 April 2021 10:48 AM GMT)

ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

சென்னை

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் போலீஷ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் போலிசார் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை போலீஸ் கமிஷனர்  மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும் போது சென்னை காவல்துறையில் உள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவது நமது சமூக கடமை என கூறினார்.

தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர்  மகேஷ் குமார் அகர்வால் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னைபோலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. 

முக கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக கடந்த 8 ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் 6000 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். வேளச்சேரி வாக்குசாவடி எண் 92ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பிற்காக துணை ராணுவம், சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீசார் என மூன்று அடுக்கு  பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலர்களிடம் இருந்து மொபைல் பார்ட்டி ஊழியர்கள் பெற்று கொண்டு செல்வது வழக்கம். அதில் சில ஊழியர்கள் செய்த தவறு. இது சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை. ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சென்னையில் 8,500 போலீசார் தடுப்பூசி போட்டுள்ளனர் என கூறினார். 

Next Story