மாநில செய்திகள்

நடிகர் விவேக் மறைவு: திரைத்துறைனர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் + "||" + Actor Vivek passes away: Film industry and political leaders mourn

நடிகர் விவேக் மறைவு: திரைத்துறைனர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் விவேக் மறைவு: திரைத்துறைனர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, 

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக நேற்று காலையில் படப்பிடிப்பின்போது, சுய நினைவின்றி மயங்கியதால், அவரது குடும்பத்தினர் அவரை உடனே சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அதன்பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். 24 மணி நேரம் கழித்துதான் அவரது உடல்நிலை குறித்து மற்ற அறிவுப்பு வெளியிட முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி இருந்தனர்..

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் விவேக் உயிர் பிரிந்தது. நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதன்படி மறைந்த நடிகர் விவேக் நகைச்சுவை மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டரில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். 

அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். திரு. விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில், “'சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு . வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!” என்று தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.  

நடிகர் கெளதம் கார்த்திக் தனது டுவிட்டரில், “இதை நம்ப முடியவில்லை. அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் ஐயா .நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில், “மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அஜய்ஞானமுத்து தனது டுவிட்டரில், “நொறுங்கியது !! நம் காலத்தின் மிகப் பெரிய நகைச்சுவை நடிகர் இனி இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது !! உங்களை எப்போதும் இழந்துவிட்டோமே” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

“எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்” என்று இயக்குநர் சேரன் தெரிவித்தார்.

“நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

“சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக்” என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

“மனிதகுல முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கும் மிக்க நன்றி” நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

“நல்ல மனிதர் விவேக், விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்” என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மயில்சாமி, ஆனந்தராஜ், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் விவேக்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், 
“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ 'காமெடி'க் கதாநாயகன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்.
2. நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம்
நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
3. நடிகர் விவேக் தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் - உள்துறை அமைச்சர் அமித்ஷா
மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
4. விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை- சென்னை மாநகராட்சி கமிஷனர்
விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.
5. நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு
நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.