“சின்னக் கலைவாணர்” என்று புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்


“சின்னக் கலைவாணர்” என்று புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 April 2021 3:37 AM GMT (Updated: 17 April 2021 3:37 AM GMT)

“சின்னக் கலைவாணர்” என்று புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்

சென்னை, 

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் “சின்னக் கலைவாணர்” என திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.  

தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





Next Story