கும்பமேளாவில் மக்களை தடுக்காமல் ஊக்குவிப்பது கொரோனாவின் 2-வது அலையை மேலும் பரப்பும்; கி.வீரமணி அறிக்கை


கும்பமேளாவில் மக்களை தடுக்காமல் ஊக்குவிப்பது கொரோனாவின் 2-வது அலையை மேலும் பரப்பும்; கி.வீரமணி அறிக்கை
x
தினத்தந்தி 17 April 2021 5:29 PM GMT (Updated: 17 April 2021 5:29 PM GMT)

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் 2-வது அலையின் வீச்சு இந்தியாவிலும், ஏன் உலக நாடுகளிலும்கூட, தமிழ்நாட்டிலும் மிகப்பெரும் அளவில் ஒரு ‘சுனாமி’ போல் பரவி வருகிறது. விதித்துள்ள பல கட்டுப்பாடுகளில், திருமண நிகழ்வுகள், இறப்பு அடக்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதை எந்த அளவுக்குத் தவிர்த்து அவர்களைக் காப்பாற்றும் பணிகளைச் செய்வதால், மக்கள் அதிகம் கூடும் மத நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாட்டுக் கூடங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

இது பக்தர்களாக உள்ள குடிமக்களைக் காப்பாற்றவே தவிர, மதத்திற்கும், கோவிலுக்கும் மற்றும் மதக் கூடங்களுக்கு விரோதமான முயற்சிகளும் அல்ல. வடநாட்டில் ‘‘கும்பமேளா’’ என்ற கங்கை, யமுனை நதிகளில் கூட்டம் கூட்டமாக மூழ்கி எழுந்தால் ‘‘புண்ணியம் கிட்டும், செய்த பாவம் போகும்” என நடப்பதை உத்தரகாண்ட், மத்தியபிரதேச, உத்தரப்பிரதேச அரசுகள் பா.ஜ.க. மதவாத அரசாக இருப்பதால், அதனைத் தடுக்காமல் ஊக்குவித்து, இரண்டாம் அலையை மேலும் பரப்பும் சமூகக் குற்றத்தினை செய்வது மன்னிக்கப்படக் கூடாத ஒன்றாகும்.

மூச்சுத் திணறலைக் கூடப் பொறுத்துக்கொண்டு வாழ முயற்சிக்கலாம். ஆனால், அறிவுத் திணறலை இப்படி சகிப்பதைவிட மனித குலத்தின் பகுத்தறிவுக்கு வேறு கொடுந்தண்டனையே தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story