நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு: மரக்கன்றுகளுடன் வந்த ரசிகர்கள்


நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு: மரக்கன்றுகளுடன் வந்த ரசிகர்கள்
x
தினத்தந்தி 18 April 2021 12:08 AM GMT (Updated: 18 April 2021 12:08 AM GMT)

அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் பலர் மாலைக்கு பதிலாக மரக்கன்றுகள் மற்றும் செடிகளை கொண்டு வந்தார்கள்.

விவேக் 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் நட்டு சமூக சேவை பணிகள் ஆற்றியதை கவுரவிக்கும் வகையில் அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் பலர் மாலைக்கு பதிலாக மரக்கன்றுகள் மற்றும் செடிகளை கொண்டு வந்தார்கள். அவற்றை விவேக் உடல் அருகே வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இறுதி ஊர்வலத்திலும் ரசிகர்கள் மரக்கன்றுகளை ஏந்தி சென்றார்கள். விவேக்கின் மரக்கன்று நடும் பணியை தொடர்ந்து செய்வோம் என்றும் உறுதி எடுத்தனர்.

நலிந்த காமெடியர்களுக்கு உதவி

விவேக் நலிந்த நகைச்சுவை நடிகர்களுக்கு பண உதவிகள் செய்துள்ளார். அவர்களின் குழந்தைகள் படிப்புக்கு கல்வி கட்டணங்களும் செலுத்தி உள்ளார். மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவித்த ஒரு நலிந்த காமெடி நடிகருக்கு தனது சம்பள தொகையை கொடுத்து திருமணம் செய்து வைக்க உதவியுள்ளார். இதனை அஞ்சலி செலுத்த வந்த நலிந்த நகைச்சுவை நடிகர்கள் சொல்லி கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

குலுங்க வைத்த நகைச்சுவைகள்

விவேக் ஒவ்வொரு படத்திலும் பேசிய பஞ்ச் காமெடி வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. சாமியாராக வந்து மயில்சாமியுடன் மோதி மல்லாக்க படுத்தா பசுமாடு மவுண்ட்ரோடுல மழை பெஞ்சா சுடுகாடு என்று பேசும் வசனம் பிரபலம். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், மாடர்ன் டிரெஸை பார்த்து மயங்கிடாதிங்க இளைஞர்களே வாயை திறந்தா உள்ளே ஒரு கூவமே இருக்கு, ஒபாமாவா இருந்தாலும் ஓமப்பொடிய சிந்தாம சாப்பிட முடியாதுடா என்று, பேசிய பல காமெடிகள் ரசிகர்களை குலுங்க வைத்தன. தங்க புஷ்பம், சமரசிம்மா ரெட்டி, மைண்ட் வாய்ஸ், தமிழ்பித்தன் மற்றும் சாக்கடையில் விழுதல், திருவான்மியூரில் கிளம்பிய என்னை டேக் டைவர்சன் என்று திருப்பதியில் கொண்டு விட்டிட்டீங்களேடா என்றெல்லாம் அவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைத்தன.

Next Story