நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது: நடிகர் விவேக் மரணம் திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்


நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது: நடிகர் விவேக் மரணம் திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்
x
தினத்தந்தி 18 April 2021 1:53 AM GMT (Updated: 18 April 2021 1:54 AM GMT)

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் 34 வருடங்களாக கோலோச்சி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் நடிகர் விவேக். நடிகர் விவேக்குக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நினைவு திரும்பாமலேயே நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 59. விவேக் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் உலுக்கியது.

விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வீட்டின் முன்னால் திரண்டனர்.

கூட்டத்தை போலீசார் தடுப்புவேலிகள் அமைத்து ஒழுங்குபடுத்தினார்கள். ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் எம்.பி.க்கள் ஆ.ராசா,ஆலந்தூர் பாரதி, மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச்செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

மேலும் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர்எச்.ராஜா, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணைப்பொதுச்செயலாளர் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, நாசர், அர்ஜுன், பார்த்திபன், சந்தானம், அருண் விஜய், பரத், ஜெய், விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ஹரிஷ் கல்யாண், எஸ்.ஜே. சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன், கவுண்டமணி, யோகிபாபு, நட்ராஜ், சூரி, மயில்சாமி, கஞ்சா கருப்பு, சார்லி, அப்புகுட்டி, தலைவாசல் விஜய், தாமு, நரேன், இமான் அண்ணாச்சி, பாண்டியராஜன், வையாபுரி, ரமேஷ்கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர்,

நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், நடிகைகள் ஜோதிகா, குஷ்பூ, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கஸ்தூரி, ரேகா, சஞ்சனா சிங், பிரியா பவானி சங்கர், ரித்விகா, சி.கே.சரஸ்வதி, அஞ்சு, ஆர்த்தி, டைரக்டர்கள் ஷங்கர், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, ஏ.எல்.விஜய், எழில், சரண், விக்ரமன், கார்த்திக் சுப்புராஜ், தரணி, பாலுமலர்வண்ணன்,

கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், காசிமுத்துமாணிக்கம், எடிட்டர் மோகன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், தினா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கேயார், தேனப்பன், ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் விவேக் உடல் மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தை அடைந்ததும் இறுதி சடங்குகள் நடந்தன. விவேக் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இறுதிச்சடங்கு காரியங்களை விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி செய்தார்.

முன்னதாக விவேக் உடலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்ய தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதையடுத்து மயானத்தில் சீருடை அணிந்த ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் விவேக் உடல் மாலை 6 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

78 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டதாக ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்தார்

நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கூட்டூரை சேர்ந்த சிவ அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவேக்கின் முழு பெயர் விவேகானந்தன். இவரது தந்தை ராமநாதபுரம் மாவட்டம் ம
ண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் படித்துஎம்.காம் முதுகலை பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் மதுரையில்
நடிப்பில் ஆர்வம் கொண்ட விவேக் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் டைரக்டர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பாலசந்தரின் புதுபுது அர்த்தங்கள் படத்தில் நடித்து பிரபலமானார். ஒரு வீடு இரு வாசல், புது மாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதயவாசல், புத்தம் புது பயணம் உள்பட பல படங்களில் வித்தியாசமான நகைச்சுவையால் கவர்ந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைபேசி ஆபரேட்டராக பணியாற்றினார். பின்னர் டி.என்.எஸ்.பி குரூப்-4 தேர்வில் வென்று சென்னை தலைமை செயலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.

நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்துகளை புகுத்தினார். மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள், சாமி உள்ளிட்ட பல படங்களில் லஞ்சம், ஊழல், அரசியல், மூட நம்பிக்கை, ஒழுக்கம் போன்ற விஷயங்களை நகைச்சுவையில் வெளிப்படுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.

இதனால் விவேக்கை சின்னக்கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். காதல் மன்னன், வாலி, திருநெல்வேலி, முகவரி படங்களில் விவேக்கின் நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட்டது. அள்ளித்தந்த வானம், ஷாஜகான், யூத், சாமி, டும் டும் டும், மனதை திருடிவிட்டாய், பாய்ஸ், திருமலை, பேரழகன், சிவாஜி, அந்நியன், படிக்காதவன், தம்பிக்கு இந்த ஊரு, உத்தம புத்திரன், மாப்பிள்ளை, பலேபாண்டியா உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவையால் சிரிக்க வைத்தார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை என்ற அவரது குறை இந்தியன் 2 படத்தில் நிறைவேறியதாக சந்தோஷப்பட்டார்.

சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகன் ஆனார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. நான்தான் பாலா, பாலக்காட்டு மாதவன். வெள்ளைப்பூக்கள் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். திரைப்பட துறையில் சாதனைகள் நிகழ்த்திய விவேக் நடிப்பில் கடைசியாக வந்த படம் தாராள பிரபு. இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

திரைப்பட துறையில் விவேக் நிகழ்த்திய சாதனைகளுக்காக 2009-ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

உன்னருகே நானிருந்தால், ரன், பார்த்திபன் கனவு, சிவாஜி ஆகிய படங்களில் நடித்ததற்காக விவேக்குக்கு தமிழக அரசு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. கலைமாமணி விருதும் பெற்றார்.

சமூக சேவை பணிகளிலும் ஆர்வம் காட்டினார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டார். இதுவரை 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார். ஆனால் 1 கோடி மரக்கன்று கனவு நிறைவேறாமலேயே மறைந்து விட்டார்.

மரணம் அடைந்த விவேக்குக்கு அருள் செல்வி என்ற மனைவியும் அம்ரிதா நந்தினி, தேஜஸ்வினி, பிரசாந்தினி, பிரார்த்தனா ஆகிய 4 மகள்களும் உள்ளனர். இவரது மகன் பிரசன்ன குமார்சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

Next Story