வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் பரபரப்பு வேட்பாளர்கள் புகாரால் உடனடியாக அகற்றம்


வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் பரபரப்பு வேட்பாளர்கள் புகாரால் உடனடியாக அகற்றம்
x
தினத்தந்தி 18 April 2021 11:23 PM GMT (Updated: 18 April 2021 11:23 PM GMT)

தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் புகாரால் உடனடியாக அது அகற்றப்பட்டது.

தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தென்காசி அருகே கொடிகுறிச்சியில் உள்ள யு.எஸ்.பி. கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கன்டெய்னர் லாரி, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த ஒரு கன்டெய்னர் அங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

சில வாக்கு எண்ணும் மையங்களில் இதுபோன்று சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் நள்ளிரவில் கன்டெய்னர் லாரி இங்கு வந்தது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் விசாரித்தபோது அந்த இடத்தில் கட்டிட பணி மேற்கொள்வதற்காக கன்டெய்னரை அங்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.

அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தபோது பொருட்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த கன்டெய்னரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ராஜா, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில நாட்களுக்கு முன்பு மின்தடை ஏற்பட்டது. தற்போது நள்ளிரவில் கன்டெய்னர் வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க.வினர் எங்களைப் போன்று கண்காணிப்பில் ஈடுபடாததால் சந்தேகம் வலுக்கிறது. எனவே, வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் பிரதிநிதிகளை அனுமதித்தது போல் வாக்கு எண்ணும் கல்லூரி கட்டிடத்தின் சுற்றுப்புற பகுதிகளிலும் எங்களது பிரதிநிதிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் போலீஸ் வேன் ஒன்று வந்துள்ளது.

அந்த வாகனத்தை தி.மு.க. வேட்பாளர்களின் முகவர்கள் மறித்து அதனை பார்வையிட்டுள்ளனர். அதில் கட்டிங் பிளேடு, ஸ்கூரு டிரைவ் உள்ளிட்ட டூல்ஸ் உபகரணங்கள் இருந்த 2 பெட்டிகள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வாகனம் டீ வினியோகிக்க வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரியிடம் புகார் மனு கொடுத்தனர்.


Next Story