நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள் பேருந்துகளை இயக்க ஏற்பாடு - அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 April 2021 8:08 AM GMT (Updated: 19 April 2021 8:08 AM GMT)

தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. 

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை, அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

இதன்படி தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி, இரவு 8 மணிக்குள் பேருந்துகள் சென்றடையும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படாது. விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலை கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும். இணைய வழியாக முன்பதிவு செய்த பயணிகள் இணையம் மூலமாகவே பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும். மாநகர் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story