டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையில் மது விற்பனை


டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையில் மது விற்பனை
x
தினத்தந்தி 19 April 2021 2:46 PM GMT (Updated: 19 April 2021 2:46 PM GMT)

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அதன்படி 20-ந் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ,டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் உடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story