வேலூரில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் உள்பட 7 பேர் பலி ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம்’’ என உறவினர்கள் புகார்


வேலூரில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் உள்பட 7 பேர் பலி ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம்’’ என உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 20 April 2021 1:18 AM GMT (Updated: 20 April 2021 1:18 AM GMT)

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உள்பட 7 நோயாளிகள் நேற்று ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

வேலூர், 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இந்த கொள்கலனில் நேற்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற 59 பேர் மற்றும் மற்ற பிரிவுகளில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற 62 பேர் என்று மொத்தம் 121 பேருக்கு மாற்று ஏற்பாடாக சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 உள்பட 7 பேர் நேற்று ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 68), திருவண்ணாமலை மாவட்டம் அழகுசேனை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (56) மற்றும் பிரேம் (40), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் (66), காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த லீலாவதி (72), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், கபாலி (37).

இவர்களில் லீலாவதி, ராஜேஸ்வரி, வெங்கடேசன், செல்வராஜ் ஆகிய 4 பேரும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மற்ற 3 பேரும் இதய கோளாறு, சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களால் அனுமதிக்கப்பட்டு பொது வார்டில் இருந்தவர்கள் ஆகும்.

7 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக அவர்களுடய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக்சிஜன் சரிவர சப்ளை இல்லாத பிரச்சினை, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மெத்தனமாக கண்டும், காணாமல் இருந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன், ஐஸ் கட்டியாக உறைந்து விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஐஸ் கட்டியாக உறைந்ததால் ஆக்சிஜன் பிளான்ட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஐஸ்சை கரைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 7 நோயாளிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story