விடுப்பு முறையில் மாற்றம் செய்ததை திரும்ப பெறக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விடுப்பு முறையில் மாற்றம் செய்ததை திரும்ப பெறக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2021 9:16 PM GMT (Updated: 20 April 2021 9:16 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுப்பு முறையில் மாற்றம் செய்திருப்பதை திரும்ப பெற கோரி தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்து கழகங்களின் தன்னிச்சையான விடுப்பு விதிகள் மாற்றம் செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும். கொரோனா நோய்தொற்று சம்பந்தமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பணிக்கு வந்து பணி வழங்க இயலாத நிலை ஏற்படும்போது, தொழிலாளர்களின் சொந்த விடுப்பை கழிப்பதும், விடுப்பு இல்லாதவர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்வதையும் கைவிட வேண்டும்.

அனைத்து பஸ்களையும் முறையாக இயக்கி அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து் கழகங்களின் அனைத்து பணிமனைகள் முன்பாக கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம்

அந்தவகையில் சென்னையில் பல்லவன் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.க. பொருளாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

எச்.எம்.எஸ். பொதுச்செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை, சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொணடு பேசினர்.

அரசின் கொள்கை முடிவு

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்ட போது நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான விடுப்புகள், கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தையொட்டி விடுப்பு விதிகள் மாற்றியமைத்து இறுதி செய்யப்பட்டன. இந்த விடுப்பு முறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது ஒப்பந்தப்பிரிவை மீறிய செயலாகும். தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். மருத்துவ விடுப்பு நடைமுறைப்படுத்துகிற காலம் ஜனவரி என மாற்றம் செய்திருப்பதும் தவறானதாகும்.

தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள விடுப்பு முறைகளை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களின் வார ஓய்வு வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி பறிக்கப்பட்டு உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இவ்வாறு கொள்கை முடிவு எடுத்திருப்பதை திரும்ப பெற வேண்டும். புதிய அரசு பதவி ஏற்றபின் அந்த அரசு கொள்கை முடிவு எடுக்கும். அதுவரையில் எவ்வித மாற்றங்களையும் செய்ய வேண்டாம்.

இவ்வாறு தொழிற்சங்கத்தினர் கூறினார்கள்.

Next Story