ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை


ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 20 April 2021 10:08 PM GMT (Updated: 20 April 2021 10:08 PM GMT)

சென்னையில் ஊரடங்கின் போது, தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கிய பிறகு தேவை இல்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, 

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றின் போது அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சமயங்களில் ஏற்கனவே பின்பற்றிய நடைமுறைகள் தொடரும். அரசு அறிவித்துள்ள நியாயமான காரணங்களுக்காக ஊரடங்கில் வெளியில் வாகனங்களில் சுற்றுபவர்கள் உரிய ஆவணத்தை காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்கள் மீது 144 தடை சட்டம் அமலில் இருப்பதால் அதன் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கு போடப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

எனவே பொதுமக்கள் கட்டுப்பாடு காத்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பகலில் தங்களது தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியில் சென்று கொள்ள வேண்டும்.

திருமண நிகழ்ச்சி

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சிக்கு அரசு அனுமதித்துள்ளது. அதற்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் ஊரடங்கின் போது செல்ல நேரிட்டால், திருமண அழைப்பிதழ்களை காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சார்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ரெயில் மற்றும் விமானங்களில் செல்பவர்கள் வாகனங்களை பயன்படுத்தினால், அதற்கு அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை காட்டினால் போதும், அனுமதி கிடைக்கும்.

2 ஆயிரம் போலீசார்

சென்னையில் ஊரடங்கின் போது 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். இதற்கு 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். வாகன சோதனை நடத்தப்படும் சாலை சந்திப்பை சுற்றி உள்ள பக்க வாட்டு சாலைகள் மூடப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எ டுத்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைமுறைக்கு வந்தது

போலீஸ் கமிஷனர் அறிவித்தபடி நேற்று இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கிய பிறகு, தேவை இல்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story