அறுவை சிகிச்சை செய்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்


அறுவை சிகிச்சை செய்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 20 April 2021 11:13 PM GMT (Updated: 20 April 2021 11:13 PM GMT)

குடல் இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சென்னை, 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டபோதே, அவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி இருந்து வந்தது. தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியிருந்ததால், உடனடியாக அவரால் சிகிச்சை பெற முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்கம் (ஹெர்னியா) ஏற்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக, அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் கேட்டுக்கொண்டனர்.

டிஸ்சார்ஜ்

உடனடியாக “லேப்ராஸ்கோப்” கருவி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குடல் இறக்கம் சரிசெய்யப்பட்டது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், சீராக இருப்பதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

வீடு திரும்பினார்

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு ஓய்வில் இருந்து வருகிறார். அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி, அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

Next Story