பயணிகள் இன்றி சென்றன பகல் நேர பஸ்கள்: இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் 4 வழிச்சாலை வெறிச்சோடியது


பயணிகள் இன்றி சென்றன பகல் நேர பஸ்கள்: இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் 4 வழிச்சாலை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 20 April 2021 11:19 PM GMT (Updated: 20 April 2021 11:19 PM GMT)

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ள நிலையில், பயணிகள் இன்றி பகல் நேர பஸ்கள் சென்றன. கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் கடைசி பஸ் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் இரவு நேர போக்குவரத்து முற்றிலுமாக நேற்று முதல் தடை செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து இரவு நேரம் புறப்படும் அனைத்து பஸ் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரவு புறப்பட வேண்டிய வெளியூர் பஸ்கள் அனைத்தும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் புறப்பட்டு சென்றன.

ஆனால் எதிர்பார்த்த அளவு பகல் நேரங்களில் இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் காலியாகவே சென்றதை காணமுடிந்தது. பஸ்கள் இரவு இயக்கப்படாத நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள தங்க நாற்கர சாலை (4 வழிச்சாலை) இரவு நேரங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில் ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அத்துடன் பகலில் வெயிலின் கொடுமை சற்று அதிகமாக உள்ளது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் உள்ளது. ஓரிரு நாட்கள் சென்றால் பஸ்களில் பயணிகள் பகலில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சிக்கு கடைசி பஸ்

சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி ஆகிய இடங்களுக்கு மதியம் 2 மணிக்கும், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், நெய்வேலிக்கு மாலை 4 மணிக்கும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளுர், ஆரணிக்கு மாலை 5 மணிக்கும், காஞ்சீபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி மற்றும் திருப்பதிக்கு மாலை 6 மணிக்கும் கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது.

அதேபோல் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு இரவு 8.40 மணிக்கும், வேலூருக்கு மாலை 6.55, பெங்களூருக்கு பகல் 2.10, ஆரணிக்கு இரவு 7.20 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு இரவு 8.15, திருவள்ளூர், மாமல்லபுரத்துக்கு இரவு 8.20, மதுராந்தகத்துக்கு இரவு 8.30 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது.

திருவண்ணாமலை, திருவள்ளூர்

இதேபோல் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இரவு 8 மணிக்கும், திருத்தணிக்கு இரவு 8.10 மணிக்கும், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய இடங்களுக்கு இரவு 7.25 மணிக்கும், காஞ்சீபுரத்திற்கு மாலை 5.25, பொன்னேரி, அரக்கோணத்துக்கு மாலை 5.45, ஊத்துக்கோட்டைக்கு இரவு 9 மணிக்கும் கடைசி பஸ் புறப்படுகிறது. ஆரணி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இரவு 6 மணி, காஞ்சீபுரம் மாலை 5.30, வேலூர் இரவு 6.30, திருவண்ணாமலை இரவு 6, சேத்துபட்டுக்கு இரவு 7 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது.

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை, பூந்தமல்லி, தாம்பரம், செங்கல்பட்டு, வேலூர், செய்யாறு, திருப்பதி, திருத்தணிக்கு இரவு 8 மணிக்கும், திருச்சிக்கு மாலை 3.15 மணி, சேலம் 2.30, விழுப்புரம் இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

வேலூரில் இருந்து சென்னைக்கு

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து பெங்களுருக்கு மாலை 4 மணிக்கும், சென்னை, அடையாறு, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு மாலை 5 மணிக்கும், புதுச்சேரி, ஆரணி, வந்தவாசிக்கு மாலை 6 மணி, வேலூருக்கு இரவு 7 மணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கம் ஆகிய இடங்களுக்கு இரவு 8 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது. ஆரணி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இரவு 6 மணி, காஞ்சீபுரம் மாலை 5.30 மணி, திருவண்ணாமலை 6 மணி, வேலூர் 6.30 மணி, சேத்துபட்டு இரவு 7 மணிக்கு கடைசி பஸ் செல்கிறது.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரத்துக்கு இரவு 7 மணி, காஞ்சீபுரம், திருத்தணிக்கு இரவு 8 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம் பகல் 2.30 மணி, பெங்களூரு, சேலத்திற்கு மாலை 4 மணி, ஓசூர் 5 மணி, திருப்பத்தூர், திருவண்ணாமலை இரவு 7 மணி, ஆரணிக்கு இரவு 8 மணி, குடியாத்தம் இரவு 9 மணிக்கு கடைசி பஸ் புறபடுகிறது.

விழுப்புரத்தில் இருந்து

அதேபோல் விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, காஞ்சீபுரத்துக்கு இரவு 6.30 மணி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரிக்கு இரவு 8 மணி, கடலூர், திருவண்ணாமலைக்கு இரவு 8.30 மணி, செஞ்சி, உளுந்தூர்பேட்டைக்கு இரவு 9 மணிக்கு கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது. பயணிகள் இந்த பஸ்களை முறையாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல்களை விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கடைசி பஸ் புறப்படும் நேரம்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7 மணிக்கும், நெல்லை, தூத்துக்குடிக்கு காலை 8 மணிக்கும், பரமக்குடி காலை 8 மணி, செங்கோட்டைக்கு காலை 8.30 மணி, திண்டுக்கல் காலை 10 மணி, கோவை காலை 10.30, காரைக்குடி பகல் 11 மணி, மதுரை பகல் 12.15 மணி, சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகல் 1 மணி, பெங்களூரு, ஓசூர் பகல் 1.30 மணி, கும்பகோணம் பகல் 2 மணி, திருச்சி 2.30, மயிலாடுதுறை மாலை 3 மணிக்கு கடைசியாக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.

Next Story