திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சத்யபிரதா சாகு உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2021 8:29 AM GMT (Updated: 21 April 2021 12:01 PM GMT)

திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்கும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரையில் தமிழகம் முழுவதும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழக தலைமைச்செயலாளர், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் சாகு ஆலோசனை நடத்தினார்.

Next Story