2-வது நாளாக நீடிக்கும் இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது சென்னை


2-வது நாளாக நீடிக்கும் இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது சென்னை
x
தினத்தந்தி 21 April 2021 6:30 PM GMT (Updated: 21 April 2021 6:30 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் இரவு நேர போக்குவரத்து முற்றிலுமாக நேற்று முதல் தடை செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து இரவு நேரம் புறப்படும் அனைத்து பஸ் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரவு புறப்பட வேண்டிய வெளியூர் பஸ்கள் அனைத்தும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் புறப்பட்டு சென்றன.

ஆனால் எதிர்பார்த்த அளவு பகல் நேரங்களில் இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் காலியாகவே சென்றதை காணமுடிந்தது. பஸ்கள் இரவு இயக்கப்படாத நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள தங்க நாற்கர சாலை (4 வழிச்சாலை) இரவு நேரங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில் ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அத்துடன் பகலில் வெயிலின் கொடுமை சற்று அதிகமாக உள்ளது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் உள்ளது. ஓரிரு நாட்கள் சென்றால் பஸ்களில் பயணிகள் பகலில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2-வது நாளாக இரவு நேர ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலைகள் வெறிச்சோடின. தலைநகர் சென்னையில் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மட்டும் ஆவணங்களை சரிபார்த்து போலீசார் செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். 


Next Story