கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயல் அரங்கேறுகிறது வைகோ குற்றச்சாட்டு


கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயல் அரங்கேறுகிறது வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 April 2021 7:42 PM GMT (Updated: 21 April 2021 7:42 PM GMT)

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயல் அரங்கேறுகிறது வைகோ குற்றச்சாட்டு.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப்படுகுழியில் தள்ளியிருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயலை அரங்கேற்றி இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இளங்கலை வரலாறு படிப்புக்கான பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்து இருக்கின்றனர்.

புராண கால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும் புகுத்திவிட்டனர். இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத்தலைப்பில் இடம்பெற்றிருந்த பாடத்தை மாற்றி, 7-வது தாளில், இந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் இந்து சமூகத்தின் சாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கைமுறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் போன்றவைகளும், அதேபோல் முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில்குழுக்கள், வாழ்க்கைமுறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்துத்துவ சனாதன கோட்பாட்டிற்கு ஏற்றவகையில் இளங்கலை வரலாறு பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கல்வித்துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப்போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story