நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2021 7:54 PM GMT (Updated: 21 April 2021 7:54 PM GMT)

நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடும்படி தலைமைச் செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

விழுப்புரம் மாவட்டம் நரையூர் கிராமத்தில் ஓடும் விவசாய பாசனக் கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கழிவுநீரை விடுவதாகவும், அதனால் விவசாயமும், கழிவுகளால் கால்வாய் தண்ணீர் ஓட்டமும் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடுக்க வேண்டும்

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விவசாய கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால் நீர் மாசடைகிறது. அதை தடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். தேவைப்பட்டால் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

சுத்திகரிப்பு நிலையங்கள்

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். அந்த உத்தரவின்படி மாவட்ட கலெக்டர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவர்களிடம் இருந்து பெற்று விரிவான அறிக்கையை தலைமைச் செயலாளர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை வருகிற ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story