தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதியன்று திறக்க கூடாது - தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை


தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதியன்று திறக்க கூடாது - தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
x
தினத்தந்தி 22 April 2021 11:58 AM GMT (Updated: 22 April 2021 12:00 PM GMT)

தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதியன்று திறக்க கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இந்நிலையில் தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதியன்று திறக்க கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் திறக்க கூடாது என வலியுறுத்தி உள்ளோம்.

சில மாவட்டங்களில் மே 1ல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தபால் வாக்கு தொடர்பாக அதிமுக தலைமைக்கு கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மேஜைகளை குறைக்கக்கூடாது என்றும் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என மனு அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

Next Story