தபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக்கூடாது தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க. கோரிக்கைதபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக்கூடாது தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க. கோரிக்கை


தபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக்கூடாது தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க. கோரிக்கைதபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக்கூடாது தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 22 April 2021 8:00 PM GMT (Updated: 22 April 2021 8:00 PM GMT)

தபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை மனு கொடுத்தார்.

சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சந்தித்து அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு:-

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தமிழகத்தில் வாக்குகள் எண்ணுகிற நாளாக மே 2-ந்தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாளில்தான் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எந்தவொரு சூழ்நிலையிலும் தபால் வாக்குகள் எண்ணப்படக்கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்பட்டதோ, அதே முறைதான் கடைபிடிக்கப்பட வேண்டும்.

முகவர்களின் தகவல்

தபால் வாக்குகள் அனைத்தும் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மே 1-ந்தேதி திறக்கக்கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட மே 2-ந்தேதியன்றுதான் அதற்கான மையங்களில் வைத்து அவை திறக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.

சில மாவட்டங்களில் இருந்து எங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் எங்களுடைய தலைமை முகவர்கள், இதுபற்றி எங்களின் கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவேதான் உடனடியாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளோம். தபால் வாக்குகளை 1-ந்தேதியன்றே எண்ண இருப்பதாக ஒரு சில மாவட்டங்களில் இருந்து தகவல் வந்திருக்கிறது. இதுபற்றி தேவையான அறிவுரையை அதிகாரிகளுக்கு வழங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அவரும் தெளிவாக இருக்கிறார். சட்டமும் தெளிவாக உள்ளது. எனவே இதையே பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாக்கு எண்ணும் மேஜைகள்

சில இடங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே கன்டெய்னர் வருவதாக செய்திகள் வருகின்றன. அதில் தேர்தல் ஆணையம் முழுமையாக தன்னுடைய கடமையை செய்யும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க.விற்கு உள்ளது. குறைகளை சுட்டிக்காட்டினால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. எனவே இந்த விஷயத்தில் பதில் சொல்ல முடியாது.

ஆனால் 100 சதவீத அளவிற்கு குற்றச்சாட்டுகளுக்கு இடம் அளிக்காத வகையில் வாக்கு எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையை எந்த காரணத்தை கொண்டும் குறைக்கவே கூடாது. பழைய நிலை எதுவோ, அந்த நிலைதான் தொடர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும், தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுவதால், இதில் அச்சப்பட தேவையில்லை. எனவே மேஜைகளை கூட்டுவது, குறைப்பது என்பது தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story