‘இந்தியன்-2’ திரைப்பட பிரச்சினை: லைகா நிறுவனமும், இயக்குனர் ஷங்கரும் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் ஐகோர்ட்டு அறிவுரை


‘இந்தியன்-2’ திரைப்பட பிரச்சினை: லைகா நிறுவனமும், இயக்குனர் ஷங்கரும் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 22 April 2021 8:08 PM GMT (Updated: 22 April 2021 8:08 PM GMT)

‘இந்தியன்-2’ படம் தொடர்பான பிரச்சினையை லைகா திரைப்படம் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், ‘‘ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்தியன்-2 படம் எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரூ.236 கோடி வரை செலவு செய்து உள்ளோம். 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்தியன்-2 படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணி முடியும் வரை வேறு திரைப்படத்தை இயக்குவதற்கு அவருக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தது.

ராம்சரண் படம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, வேறு படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார். வருகிற ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான 5 மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார்’’ என்று கூறினார்.

விவேக் திடீர் மரணம்

மேலும் அவர், லைகா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது, அவற்றை திரும்பப்பெற வேண்டும். நடிகர் விவேக் திடீரென இறந்து விட்டதால், அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்’’ என்றும் கூறினார்.

லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே ரூ.32 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது. மீத தொகையை வழங்க தயாராக உள்ளோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டிய படத்தை, இன்னும் முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவற்றை மறந்து விட மனுதாரர் நிறுவனம் தயாராக உள்ளது’’ என்று கூறினார்.

சுமுக தீர்வு

இதையடுத்து நீதிபதிகள், ‘‘நீதிமன்ற உத்தரவு என்பது சுமுக தீர்வை ஏற்படுத்தாது. அதனால், இரு தரப்பினரும் கலந்து பேசி இந்த பிரச்சினையில் சுமுக தீர்வு காண வேண்டும்’’ என்று அறிவுரை கூறி விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story